பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மறுக்கும் அவலம்!
விழுப்புரம்,நவ.17: அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மற்றும் கோரிக்கை மனுக்கள் முறையாக பரிசீலிக்கப்படாமல் கிடப்பில் போடப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
குடிநீர், பட்டா, குடும்ப அட்டை, சாலை வசதி போன்ற அடிப்படை தேவைகளுக்கு கூட கிராம நிர்வாக அலுவலர் முதல் வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் வரை ஒவ்வொரு நிர்வாக ஆட்சியர் படி நிலையாக மக்கள் ஏறி இறங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஏன் இந்த தாமதம்…?
விசாரணையில் பல காரணங்கள் தெரிய வருகின்றன.
முடிவெடுத்தால் பொறுப்பாகிவிடும் என்ற அச்சத்தில் அடுத்தவர்களை காரணமாக சுட்டிக்காட்டும் போக்கு, கடுமையான ஆள் பற்றாக்குறை, மனித சக்திக்கு மீறிய பணிச்சுமை, எத்தனை நாட்களில் பதில் தர வேண்டும் என்ற காலக்கெடு பொதுவெளியில் அறிவிக்கப்படாதது, லஞ்சம் மற்றும் ஊழல் செய்ய வேண்டும் என்பது முக்கிய காரணங்கள்.
அதிகார திமிரில் சில இடங்களில் வேண்டுமென்றே சிறு குறை கூறி மனுக்களை திருப்பி அனுப்பி அலைக்கழிக்கும் போக்கும் இருப்பதாக புகார் எழுகிறது.
விளைவு என்ன?
ஒவ்வொருவரும் தங்களது இன்றியமையா தேவைக்காக, பல்வேறு நெருக்கடி நிலைகளில், அன்றாட பணிகளை ஒதுக்கி வைத்து, வருவாய் இழப்போடு, பல வகைகளில் செலவு செய்து, பல மணி நேரங்கள் காத்திருந்து, அலுவலர்களின் அலட்சியத்தையும் அவமானத்தையும் பொறுத்துக் கொண்டு அலுவலகம் வரும் ஏழை மக்கள் பலமுறை ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். “அரசு அலுவலகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு எளிதில் வேலை ஆகாது” என்ற நம்பிக்கையின்மை அதிகரித்து, மக்கள் இடைத்தரகர்களை நாடும் அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
மக்கள் என்ன செய்ய வேண்டும்…?
சட்ட வழிகள் :
1).வாய்மொழியாக அல்ல, ஆதாரத்துடன் மனு, எழுத்துப்பூர்வமாக இரண்டு நகல் எடுத்து, ஒன்றில் கையொப்பம் / ரசீது எண் கட்டாயம் வாங்குங்கள். e-Sevai மையம் மூலம் கொடுத்தால் ரசீது உறுதியாக கிடைக்கும்,
2).முதல்வர் தனிப்பிரிவை பயன்படுத்துங்கள், cmcell.tn.gov.in இல் பதிவு செய்தால் ஒவ்வொரு மனுவுக்கும் எண் வழங்கப்பட்டு 30 நாட்களில் பதில் தர வேண்டும்.
3).மாவட்ட ஆட்சியரின் திங்கள் கிழமை குறைதீர் கூட்டத்தையும் பயன்படுத்தலாம்.
4.RTI எனும் சட்ட ஆயுதம்: “என் மனு மீது என்ன நடவடிக்கை? கோப்பு யாரிடம் உள்ளது…?” என தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் மனு அளியுங்கள், பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் பதில் தர வேண்டியது கட்டாயம்.
4).லஞ்சம் கேட்டால்: 1064 என்ற இலவச எண்ணில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கலாம்.
5).அரசு அலுவலகம் என்பது கருணை காட்டும் இடமல்ல,
மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் சேவை மையம்.
6).ஒவ்வொரு மனுவுக்கும் காலக்கெடு நிர்ணயித்து, தாமதத்திற்கு பொறுப்பேற்க வைக்கும் “சேவை உரிமைச் சட்டத்தை” தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.
7).பொதுமக்களுக்கு வேண்டுகோள்:
இனி மனு அளிக்கும்போது, நடைமுறையில் உள்ள அரசாணைகளின் படி ஒப்புகைச்சீட்டு கேட்டு பெற்றுக்கொள்ளங்கள், அவை நீங்கள் உரிமை பெறுவதற்கான அடையாளம்,
என்றும், உங்கள் உரிமைக்காக கேள்வி கேட்கவும், போராடவும் தயங்காதீர்கள்.









Leave a Reply